Sunday, April 19, 2009

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே - 1000 மாவது தேன் சொட்டு

போரின் பிளந்த வாயில் அகப்பட்டிருக்கும் தமிழீழ மக்களுக்காகவும் உலகின் போர்க்களங்களிலெல்லாம் அநியாயமாக அகப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் ஏனைய உயிர்களுக்காகவும் தேன் கிண்ணத்தின் 1000 மாவது பாடலாக இந்தப்பாடல் அமைகிறது.

சின்ன வயசில படிக்கேக்க எதியோப்பியாவில் பட்டினியால் ஒட்டிய உடலுடன் இருந்த அந்தப் பெடியனைப் புத்தகத்தில் பார்த்தது போல இப்ப ஒவ்வொரு நாளும் என்ர இரத்த உறவுகளைப் பார்க்கிறேன். பசியால் கதறிய குழந்தையைப் பார்க்க சகிக்காமல் செல்லடிக்கு பயந்து இருந்த கணவனைப் பால்மா வாங்கிவா என்று கட்டாயப்படுத்தி அனுப்பிய மனைவி கணவனின் சிதறிய உடலைப்பார்த்து கதறி அழுவதைப் பார்க்கிறேன். யுத்தத்தின் இன்னொரு கோர முகமாக தினமும் என் சகோதரிகள் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு கொலை செய்யப்படுவதை வாசிக்கிறேன். குழந்தைகளை மலர்களுக்கு ஒப்பிடுகிறார்கள்: அந்த மலரொன்று மலரும் முன்னமே இரத்தம் கசிய கசிய பிய்த்து எறியப்படுவதைக் கண்ணீரோடு பார்க்கிறேன்.கடவுளின் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்ற கட்புலன் ,செவிப்புலன் இழந்த சிறார்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள் : கடவுள் கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிற மாதிரியிருக்கு.மனம் பிறள்கிறது.

போரால் சபிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் மட்டுமல்ல அப்பாவிச் சிங்களவர்களும் தான். முந்தநாள் ஊருக்குப் போன் பண்ணும்போது மாமா சொன்னார் வன்னிக்கு அனுப்புறதுக்காக அவேன்ர வீட்டுக்கிட்ட இருந்த 2 சென்ரி எடுத்தாச்சாம். ஒரு சென்ரில இருக்கிற ஆமி வந்து 2 நாளா சாப்பாடு வரேல்ல என்று அழுவாராப்போல சாப்பாடு கேட்டதாம்.

ஒருமாமா தலையில காயப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வருகிறது. மற்ற உறவுகள் உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ என்று ஏங்கி ஏங்கி தினமும் காலையில் இணையத்தளங்களில் இறந்தவர்கள், காயப்பட்டவர்களின் பெயர்களை தடவித் தடவிப் பார்க்கிறேன். வேலைக்குப் போனாலும் வேலை செய்யமுடியாமல் இருக்கிறது. வேலையிலிலருந்தும் உடல் கருகி வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் அண்ணாமார்களையே திரும்ப திரும்ப பார்க்கிறேன். இனிமேலும் தாங்க முடியாது.விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.


வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!

(வெள்ளைப் பூக்கள்)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!

(வெள்ளைப் பூக்கள்)



படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல்: வைரமுத்து
இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்

18 Comments:

ஆயில்யன் said...

அருமையானதொரு தேர்வு !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதி தோன்ற ப்ரார்த்திக்கிறேன்,வாழ்த்துகிறேன்..


தேன்கிண்ணத்துக்கும் தேனிக்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//.கடவுளின் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்ற கட்புலன் ,செவிப்புலன் இழந்த சிறார்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள் : கடவுள் கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிற மாதிரியிருக்கு.மனம் பிறள்கிறது/

போர் என்ற பெயரில் இனவெறி அரசினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஈனச்செயலில் இது போன்ற காட்சிகளை கண்டும் போர் நியாயங்களை கண்மூடி மறுத்துக்கொண்டிருக்கும் நாடுகளை நினைத்துப்பார்த்தால் மனம் அழுகிறது :(

ஆயில்யன் said...

//விடியும் பூமி அமைதிக்காக விடிகவே//

நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் அந்த நன்நாளினை எதிர்ப்பார்த்து...!

Thekkikattan|தெகா said...

பதிவு ம்ம் என்ன சொல்வது. சீக்கிரமே ஒரு விடிவு கிடைத்தால் எல்லாருக்கும் நிம்மதியாக இருக்கும்...

1000த்திற்கு வாழ்த்துக்கள், மக்களே!

Thamiz Priyan said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தேன் கிண்ண குழுவினருக்கு!
விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.

Anonymous said...

//எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!//

நிச்சயம் வெள்ளப்பூக்க்ளும்,, வெள்ளைக்குயிலும் கூவிடும்... காத்திருப்போம் நம்பிக்கையுடன்.

சரியான தேர்வு 1000 ஆவது பதிவிற்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தேன் கிண்ண குழுவினருக்கு!
விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.

தேவன் மாயம் said...

அருமையான பாடல் !! விரைவில் அமைதி திரும்பும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்!!

பரிசல்காரன் said...

இந்தப் பாடல் வந்த புதிதில் பித்துப் பிடித்தவனாய் இந்தப் பாடலையே கேட்டுக் கொண்டிருப்பேன்.

விடை கொடு எங்கள் நாடே-வும் மனதைக் கனமாக்கும் ஒரு பாடல்.

அமைதி திரும்ப ப்ரார்த்திக்கிறேன்.

பாடலுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை வரிகள் ப்ரமாதம்.

சென்ஷி said...

அமைதி தோன்ற ப்ரார்த்திக்கிறேன்,வாழ்த்துகிறேன்..


தேன்கிண்ணத்துக்கும் தேனிக்களுக்கும் வாழ்த்துக்கள்.

விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.

நாகை சிவா said...

விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.

துளசி கோபால் said...

தேர்வு அருமை.

ஆயிரம் கண்டதுக்கு வாழ்த்து(க்)கள்.

அமைதி நிலவ ஆண்டவனை வேண்டுகின்றோம்.

Sanjai Gandhi said...

ஆயிரமாவது பாடலா.. வாவ்.. வாழ்த்துக்கள்.. ;)

Anonymous said...

Everyone talk about peace. what whill happen to the ppl killed in thousands and dependent ppl of them. who will look after. who will take care of tehm. who will marry the raped girls. who will take care of the children. form yeastday I cant comment or read news or send comments in FB or Orkut because of a news i heard.
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
FROM A TAMIL RAPE VICTIMS BODY ATOPSY PPL COLLETED 900 ML OF SPERM..
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
afte this i felt depressed very much. help less. But I dont feel about peace. But I cant take revenge also. I cant confirm this message but the guy said the RED cross said these sinhala army had done better tahn nazi..

வெண்காட்டான் said...

Horrible. but I dont know this news si true. but this is what happing htere. that is true

Joe said...

அருமையான பாடல்.
ஈழத்தில் அமைதி திரும்பும் என்று நம்புவோம், விரைவில் ஒரு நல்ல தீர்வு வர இறைவனை வேண்டுவோம்.

இதே போல நானும் ஒரு சில பதிவுகளை எழுதினேன்.

http://joeanand.blogspot.com/2009/04/best-song-ever-sung-by-r-rahman.html
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_16.html

கவிதா | Kavitha said...

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
இந்த விடியலுக்காக காத்திருப்போம்


1000 தேன் சொட்டுகளுக்கு வாழ்த்துக்கள்!!

இதில் இருந்து சில சொட்டுகள் தேவைப்படும் போது நான் எடுத்திருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் சந்தோஷபடுகிறேன்... :)
கிடைப்பதற்கு அறிய பாடல்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி.. :))

Last 25 songs posted in Thenkinnam